இலங்கையில் கார்பன் கணக்கியல் நிதி கூட்டமைப்பில் (Partnership for Carbon Accounting Financials – PCAF) இணைந்த முதல் காப்புறுதி நிறுவனமாக Softlogic Life சாதனை படைத்துள்ளது. இது நிதி நிறுவனங்கள் தங்களின் நிதியளிப்பு மற்றும் முதலீட்டுச் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பசுமை இல்ல வாயு உமிழ்வுகளை அளவிடவும், நிர்வகிக்கவும் மற்றும் வெளிப்படுத்தவும் உதவும் ஒரு உலகளாவிய, தொழில்சார் ரீதியிலான அமைப்பாகும்.
இந்த முக்கிய மைல்கல் சாதனையானது, இலங்கையின் காப்புறுதித் துறையில் காலநிலை சார்ந்த பொறுப்புக்கூறலில் Softlogic Life நிறுவனத்தை முன்னணியில் நிறுத்தியுள்ளது. உலகளாவிய ரீதியில் நிதி நிறுவனங்கள், தங்களது அலுவலக நடவடிக்கைகளால் ஏற்படும் நேரடிப் பாதிப்புகளைக் குறைப்பதோடு நின்றுவிடாமல், தங்களது முதலீடுகள் மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் ஏற்படும் பாரிய சுற்றுச்சூழல் தாக்கங்களைக் கண்டறிந்து அவற்றைக் கட்டுப்படுத்துவதில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், 2015ஆம் ஆண்டு முதல், வணிக வங்கிகள், அபிவிருத்தி வங்கிகள், சொத்து உரிமையாளர்கள், சொத்து முகாமையாளர்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் உள்ளிட்ட PCAF உறுப்பினர்கள், நிதி முதலீட்டுத் தொகுப்புகளில் (Financial portfolios) பசுமை இல்ல வாயு கணக்கியலுக்கான பொதுவான தரநிலைகளை உருவாக்கவும், நடைமுறைப்படுத்தவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்தக் கூட்டு முயற்சியானது, உலகெங்கிலும் உள்ள நிதி நிறுவனங்கள் தங்களின் கடன்கள் மற்றும் முதலீடுகளுடன் தொடர்புடைய உமிழ்வுகளை (Emissions) சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவியுள்ளது. நிதித் துறையினருக்கான PCAF உலகளாவிய பசுமை இல்ல வாயு (GHG) கணக்கியல் மற்றும் அறிக்கையிடல் தரநிலையை பின்பற்றுவதன் மூலம், Softlogic Life தனது முதலீட்டு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய உமிழ்வுகளை முறையாக அளவிட முடியும். ஏனெனில், பெரும்பாலான நிதி நிறுவனங்களுக்கு இந்த முதலீட்டுத் துறையே அதிகப்படியான உமிழ்வு வெளிப்பாட்டைக் (Emissions exposure) கொண்ட பகுதியாகும்.
இந்த நடவடிக்கையானது, IFRS S2 காலநிலை தொடர்பான வெளிப்படுத்தல் தரநிலையைப் பிரதிபலிக்கும் SLFRS S2 உள்ளிட்ட வளர்ந்து வரும் காலநிலை வெளிப்படுத்தல் தேவைகளுடன் நிறுவனத்தின் இணக்கத்தை மேலும் வலுப்படுத்துகிறது. 2024 நிதி ஆண்டிற்காக, Softlogic Life சுமார் 4,700 tCO₂e அளவிலான மொத்த ஸ்கோப் 1, 2 மற்றும் 3 கார்பன் உமிழ்வுகளைப் பதிவு செய்துள்ளது. இதில் முதலீடு சார்ந்த உமிழ்வுகளே பெரும்பான்மையாக உள்ளன. PCAF மூலமாக, நிறுவனம் தனது காலநிலை தொடர்பான வெளிப்படுத்தல்களில் வெளிப்படைத்தன்மை, சீரான தன்மை மற்றும் ஒப்பீட்டுத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன், முதலீட்டு நிர்வாகம், இடர் முகாமைத்துவம் மற்றும் நீண்ட கால மூலதனப் பொறுப்பாண்மை ஆகியவற்றில் உமிழ்வுத் தரவுகளை ஒருங்கிணைக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முக்கியமாக, காலநிலை பொறுப்புக்கூறலில் தரவு சார்ந்த அணுகுமுறையை கையாளும் Softlogic Life நிறுவனத்தின் திறன், அதன் வலுவான நிதி மற்றும் செயல்பாட்டு செயல்திறனால் உறுதிப்படுத்தப்படுகிறது. 2025 செப்டம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடையும் ஒன்பது மாத காலப்பகுதியில், நிறுவனம் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணமாக ரூ. 28.2 பில்லியனை பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 29 சதவீத வளர்ச்சியை குறிக்கிறது. அத்துடன், வரிக்கு முந்தைய இலாபமாக 3.3 பில்லியன்
ரூபாயையும், வரிக்கு பிந்தைய இலாபமாக 2.3 பில்லியன் ரூபாயையும் நிறுவனம் ஈட்டியுள்ளது. இந்த தொடர்ச்சியான வளர்ச்சி, மேம்பட்ட காலநிலை அளவீடு மற்றும் அறிக்கையிடலை ஆதரிக்கும் இடர் முகாமைத்துவ அமைப்புகள், தொழில்நுட்பத் தளங்கள் மற்றும் நிர்வாக கட்டமைப்புகளில் தொடர்ந்து முதலீடு செய்வதை சாத்தியமாக்கியுள்ளது.
நிதி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய உமிழ்வுகளை அளவிடுவது, நிதி நிறுவனங்களின் பயனுள்ள காலநிலை நடவடிக்கை பயணத்திற்கான அடிப்படையாகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உமிழ்வுத் தரவுகள் உறுதி செய்யப்பட்டவுடன், நிறுவனங்கள் சூழல் பகுப்பாய்வுகளை மேற்கொள்ளவும், நம்பகமான இலக்குகளை நிர்ணயிக்கவும், மூலோபாய நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் மற்றும் காலப்போக்கில் ஏற்படும் முன்னேற்றங்களை வெளிப்படுத்தவும் சிறந்த நிலையில் இருக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து, முதலீட்டுத் தொகுப்புகளைச் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தவும், நீண்டகால நோக்கில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் இன்றியமையாத காரணிகளாக அமைகின்றன.
இது குறித்து Softlogic Life நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் இஃப்திகார் அஹமட் கருத்துத் தெரிவிக்கையில், “காலநிலை மாற்றம் தொடர்பான இடர் என்பது நிதி ரீதியான இடராகவே கருதப்பட வேண்டும். காப்புறுதி நிறுவனங்கள் தமது நேரடிச் செயல்பாடுகளை மட்டும் அளவிடுவதோடு நின்றுவிடாமல், தாம் எவற்றிற்கு நிதி வழங்குகிறோம் அல்லது எங்கு முதலீடு செய்கிறோம் என்பதையும் துல்லியமாக அளவிட வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளன. எமது முதலீட்டு நடவடிக்கைகளில் காலநிலை தாக்கங்களை மதிப்பிடும்போது, அதில் அதிகளவிலான ஒழுங்குமுறை, நம்பகத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே நாம் திட்டமிட்டு ‘PCAF அமைப்பில் இணைந்துள்ளோம். இடர் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் மூலதன பொறுப்புணர்வு ஆகியவற்றில் நீண்டகால தொலைநோக்குப் பார்வையைக் கொண்ட ஒரு நிறுவனம் என்ற வகையில், எமது வணிகத்தை எதிர்காலச் சவால்களுக்கு ஏற்றவாறு தயார்படுத்துவதற்கும், மீள்திறன் கொண்ட ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு ஆதரவளிப்பதற்கும் இந்த நடவடிக்கை ஒரு மிகச்சிறந்த அடித்தளமாக அமையும்,” என்றார்.
2019 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட ‘PCAF’ அமைப்பானது, தற்போது வங்கிகள், சொத்து முகாமையாளர்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள 700-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களை ஒன்றிணைத்து, நிதிசார் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய உமிழ்வுகளை அளவிடுவதற்கான பொதுவான தரநிலைகளை உருவாக்கி வருகின்றது. கடன்கள், முதலீடுகள் மற்றும் காப்புறுதி உறுதிப்பாட்டு (Underwriting) நடவடிக்கைகள் ஆகியவற்றில் காலநிலை அளவீடு மற்றும் வெளிப்படுத்தல் தொடர்பான சிறந்த நடைமுறைகளை முன்னெடுப்பதற்கு இதன் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர். Softlogic Life நிறுவனத்தின் இந்த மூலோபாய நகர்வானது, நிலைபேறான மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய காப்புறுதித் துறையில் அதன் தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், வெறும் மேலோட்டமான வாக்குறுதிகளுக்கு அப்பால் சென்று, அளவிடக்கூடிய மற்றும் முறையான தரவுகளை அடிப்படையாகக் கொண்ட காத்திரமான காலநிலை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நிறுவனத்தின் தெளிவான நோக்கத்தையும் பறைசாற்றுகின்றது.
