இலங்கையின் காப்புறுதித் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்து வரும் முன்னணி நிறுவனமான Softlogic Life, டயலொக் நிறுவனத்தின் Doc990 உடன் கைகோர்த்துள்ளது. இந்த மூலோபாயக் கூட்டாண்மையின் ஊடாக, தனது கூட்டாண்மை சுகாதார மற்றும் ஆயுள் காப்புறுதி வாடிக்கையாளர்களுக்காக முற்றிலும் பணமில்லா வெளிநோயாளர் பிரிவு (OPD) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இதுவரை நடைமுறையிலிருந்த பணம் செலுத்தி பின்னர் மீளப்பெறும் முறையைத் தவிர்த்து, நிகழ்நேர டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நோயாளர்கள் எவ்வித பணக் கொடுப்பனவுகளுமின்றி வெளிநோயாளி சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய அனுபவத்தை வழங்குகிறது.
இந்த ஒருங்கிணைப்பின் மூலம், Softlogic Life கூட்டாண்மை மருத்துவக் காப்புறுதித் திட்டங்களின் கீழ் உள்ள ஊழியர்கள், எவ்வித நேரடி முன்பணமுமின்றி Doc990 தளத்தின் ஊடாக வைத்தியர்களை முன்பதிவு செய்ய முடியும். இதற்கான கட்டணங்கள் அவர்களின் காப்புறுதிச் சலுகை வசதியிலிருந்து தடையின்றி நேரடியாகக் கழிக்கப்படும். சிகிச்சையளிக்கப்படும் இடத்திலேயே உரிமை கோரிக்கைகள் உடனடியாகச் செயல்படுத்தப்படுவதால், கைமுறை ஆவணச் சமர்ப்பிப்புகள் அல்லது பணம் மீளக் கிடைப்பதற்கான நீண்டகாலக் காத்திருப்பு நேரங்கள் தவிர்க்கப்படுகின்றன. சுகாதாரக் காப்புறுதியின் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு பகுதியை இது அடிப்படை ரீதியாக எளிமைப்படுத்துவதுடன், இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் இணைக்கப்பட்ட ஊழியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையிலும் அமைந்துள்ளது. அத்துடன், இந்த வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு Doc990 சேவைக்கட்டணத்தில் 35% தள்ளுபடி வழங்கப்படுவதால், அவர்கள் தமது வெளிநோயாளர் பிரிவு வரம்புகளைச் சேமித்து, காப்புறுதியின் மூலம் அதிக நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடிகிறது.
இலங்கையின் மிகப்பெரிய சுகாதாரக் காப்புறுதி நிறுவனம் என்ற வகையில், Softlogic Life வெறும் பாதுகாப்பு வழங்குவதற்கும் அப்பால் சென்று, காப்புறுதியை நேரடியாகவே சுகாதாரப் பயணத்தின் ஒரு அங்கமாக இணைத்து வருகின்றது. டிஜிட்டல் சூழல் அமைப்புகள், நிகழ்நேர உரிமை கோரிக்கை செயலாக்கம் மற்றும் தள ஒருங்கிணைப்புகள் மூலம் காப்புறுதி அனுபவம் எவ்வாறு மறுவரையறை செய்யப்படுகின்றது என்பதையும், அது ஒரு சாதாரண பரிவர்த்தனை சார்ந்த தயாரிப்பு என்பதிலிருந்து எந்நேரமும் கிடைக்கும் ஒரு சேவையாக (always-on service) எவ்வாறு மாற்றமடைகின்றது என்பதையும் இந்தக் கூட்டணி பிரதிபலிக்கின்றது. காப்புறுதித் தகைமையை நேரடியாக வைத்தியர் முன்பதிவு (உhயnநெடiபெ) செயற்பாட்டுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், வெளிநோயாளர் உரிமை கோரிக்கைகள் தொடர்பான நீண்டகாலச் சிக்கல்களை அகற்றி, அவற்றுக்குப் பதிலாக வேகம், எளிமை மற்றும் தடையற்ற மருத்துவ அணுகலை Softlogic Life வழங்குகின்றது.
இந்தக் கூட்டாண்மை குறித்து Softlogic Life இன் முகாமைத்துவப் பணிப்பாளர் இப்திகார் அஹமட் கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய காப்புறுதித் துறையில் உள்ள உண்மையான வாய்ப்பு என்பது வெறும் இடர் பாதுகாப்பு வழங்குவதில் மட்டுமல்ல, மருத்துவச் சேவைகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்களை நீக்குவதாகும். இன்று நாம் நாட்டின் மிகப்பெரிய கூட்டாண்மை காப்புறுதிப் பட்டியல்களைக் (corporate portfolios) கொண்டுள்ளோம், இதில் இலங்கையின் முன்னணி நிறுவனங்களும் அடங்கும். எமது தனித்துவம் என்பது விலைக்கு அப்பாற்பட்டது. எமது சேவையின் பலம் மற்றும் தொழில்நுட்பத்தை தடையின்றி ஒருங்கிணைப்பதன் ஊடாக, நிறுவனங்களுக்கும் அவர்களது ஊழியர்களுக்கும் காப்புறுதியை ஒரு சுமையற்ற அனுபவமாக மாற்றுவதே எமது பலமாகும். Doc990 உடனான இந்த இணைப்பின் மூலம், வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் தருணத்திலேயே காப்புறுதியை நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் நாம் வடிவமைத்துள்ளோம். இது அவர்களுக்கு கவலையற்ற, உடனடி மற்றும் இலகுவான சேவையை வழங்குகின்றது. இது ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகும். இதன் மூலம் எமது நிறுவனத்தின் வளர்ச்சி, நாம் சேவையாற்றும் நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் சிறந்த தீர்வுகள், மேம்பட்ட சுகாதார அணுகல் மற்றும் அன்றாட வாழ்வில் உண்மையான பெறுமதியை வழங்கும்.” என்று குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டாண்மை குறித்து Dialog Axiata PLC நிறுவனத்தின் பணிப்பாளரும், குழுமத்தின் பிரதம நிர்வாக அதிகாரியுமான சுபுன் வீரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையர்களுக்கான மிகவும் அணுகக்கூடிய மற்றும் இணைக்கப்பட்ட சுகாதார சேவையை முன்னெடுப்பதில் Softlogic Life நிறுவனத்துடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டிஜிட்டல் தளங்களின் வசதிகளை காப்புறுதியுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், தனிநபர்கள் வெளிநோயாளர் பராமரிப்பு சேவையை அணுகும் முறையை இந்தக் கூட்டாண்மை எளிதாக்குவதுடன், தேவைப்படும் தருணத்தில் தடையற்ற மற்றும் பணமில்லா அனுபவத்தைப் பெற வழிவகுக்கின்றது. Doc990 ஊடாக, வசதிகளை மேம்படுத்தவும், சேவையின் பரப்பை விரிவுபடுத்தவும், இலங்கை முழுவதும் ஒரு வினைத்திறனான சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உள்ளோம்.” என்று தெரிவித்தார்.
இந்த முயற்சியின் ஊடாக, டிஜிட்டல் முறையிலான ஆயுள் மற்றும் சுகாதாரக் காப்புறுதியில் ஒரு முன்னணி நிறுவனமாக தனது நிலையை Softlogic Life மேலும் பலப்படுத்தியுள்ளது. பாதுகாப்புடன் கூடிய வசதிகளையும் எதிர்பார்க்கும் வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தேவைகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவும், காப்புறுதியை அன்றாட சுகாதார அணுகுமுறையின் ஒரு தடையற்ற மற்றும் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றியமைக்கும் வகையிலும் இத்திட்டம் அமைந்துள்ளது.
